மக்கள் கணினி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
By திருவண்ணாமலை | Published on : 03rd August 2016 06:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாவட்டத்தில் உள்ள மக்கள் கணினி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாட்சியர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசுகையில், வேளாண் துறை சார்பில் மானாவரி பருவத்தில் மணிலா விதையும், ஆடிப் பட்டத்துக்கு பொன்னி நெல் விதையும் விற்பனை செய்யவில்லை. எனவே, இறவைப் பட்டத்துக்காவது விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பண வசூலைத் தடுக்க வேண்டும்.
மக்கள் கணினி மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதையடுத்து பேசிய வட்டாட்சியர் சி.பன்னீர்செல்வம், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.