Enable Javscript for better performance
போளூர் பேருந்து நிலையத்தில் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு: பணிகள் முடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    போளூர் பேருந்து நிலையத்தில் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு: பணிகள் முடக்கம்

    By போளூர்  |   Published on : 04th August 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் வணிக கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் முடக்கப்பட்டன.

    போளூர் பேருந்து நிலையம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, ஆற்காடு, செங்கம், ஜவ்வாதுமலை மற்றும் போளூர் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு செல்லும் நகரப் பேருந்துகள் என 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் போளூர் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    பேருந்து நிலையத்தின் 2 புறங்களிலும் பேரூராட்சி சார்பில் 15 வணிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகள் உள்ளே வரவும், வெளியில் செல்லவும் வழி உள்ளது.

    இந்த வழிக்கு மத்தியில் சேத்துப்பட்டு, சென்னைக்கு செல்லும் பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி உள்ளது.

    இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ரூ.11.50 லட்சத்தில் 6 வணிக கடைகள் அமைக்க பேரூராட்சிக் கூட்டத்தில் கடந்த திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் கடை அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் இடத்தை சமன்படுத்தும் பணி நடைபெற்றது.

    தொடர்ந்து, புதன்கிழமை காலை கடை அமைக்க இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    இதனை கண்ட அதிமுக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பழனியை தொடர்புகொண்டு, பேருந்து நிலையத்தில் உள்ள இட நெருக்கடி குறித்து அவரிடம் தெரிவித்ததுடன், கடைகள் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் மேலும் வணிக கடைகள் அமைத்தால் இட நெருக்கடி ஏற்படுவதுடன், பேருந்துகள் நிலையத்துக்குள் வந்து செல்ல முடியாத நிலை உருவாகும். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து ஆபத்து காலங்களில் பயணிகள் வெளியேற வழியில்லை என்றனர்.

    அதிமுகவினர் புகார்: பேரூராட்சி துணைத்தலைவர் (அதிமுக) செல்வம் கூறுகையில், தற்போது செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிக்கு  செயல் அலுவலராக உள்ள குணசேகரனை போளூர் பேரூராட்சிக்கு பொறுப்பு செயல் அலுவலராகக்கொண்டு வந்து வேலை செய்கின்றனர்.

    மேலும், உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுகவினர் பதவியில் உள்ளபோதே கடைகளை அமைத்து இடம் பிடிக்க திட்டம் தீட்டியுள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai