Enable Javscript for better performance
வந்தவாசி அருகே ஏரியில் நரபலியா? போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே ஏரியில் நரபலியா? போலீஸார் விசாரணை

    By வந்தவாசி  |   Published on : 04th August 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு ஏரியில் பள்ளங்கள் தோண்டி மூடிய அறிகுறியும், அருகில் அறுபட்ட கோழியுடன் மாந்திரீக பூஜைப் பொருள்களும் காணப்பட்டதால், இங்கு நரபலி நடந்திருக்கலாம் எனத் தகவல் பரவியது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கீழ்க்குவளைமேடு கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள தைலத் தோப்பில் 4 அடி நீளம், 2 அடி அகலம் அளவிலும், ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம் அளவிலும் 2 பள்ளங்கள் தோண்டி மூடப்பட்ட நிலையில் இருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. மேலும், மூடப்பட்ட பள்ளங்களின் அருகில் அறுபட்ட கோழி மற்றும் மஞ்சள், குங்குமம், கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருள்களும் இருந்தன.

    இதனால் நரபலி சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தகவல் பரவியது. இதையடுத்து, கிராம மக்கள் ஏரிப் பகுதியில் குவிந்தனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் அகத்தீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி உள்ளிட்ட வருவாய்த் துறையினரும், வந்தவாசி வடக்கு போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் இரு இடங்களிலும் பள்ளம் தோண்டி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில், அந்தப் பள்ளங்களில் பானை, எலுமிச்சை மற்றும் வாழைப் பழங்கள், குங்குமம் ஆகியவை மட்டும் இருந்தது தெரியவந்தது.

    இதனால் மாந்திரீக பூஜை ஏதாவது நடந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai