Enable Javscript for better performance
கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்: செய்யாறு நகர வளர்ச்சி திட்டமிடல் கூட்டத்தில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்: செய்யாறு நகர வளர்ச்சி திட்டமிடல் கூட்டத்தில் வலியுறுத்தல்

    By செய்யாறு  |   Published on : 05th August 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நகர வளர்ச்சி திட்டமிடல் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நகர வளர்ச்சி திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு சார்-ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார்.

    கூட்டத்தின்போது, செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நீர்பாசன கால்வாய்கள், குளங்கள் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரில் உள்ள கால்வாய்களை ஒருங்கிணைத்து தேங்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, அருகில் உள்ள ஏரியிலோ அல்லது பெரிய கால்வாய் மூலமோ தேக்கி விவசாய பயன்பாட்டுக்கு உதவிட வேண்டும்.

    இரவு நேரங்களில் அருகிலுள்ள ஊர் பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலை சுற்றுலாத்தலமாக்கிடும் வகையில், செய்யறை சுற்றி உள்ள பாடல் பெற்ற திருத்தலங்களான குரங்கனில் முட்டம் வாலீஸ்வரன் கோயில், திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் கோயில், அழிவிடைதாங்கி பைரவர் கோயில், பல்லவர் காலத்து மாமண்டூர் குகை கோயில், பிரம்மதேசத்தில் உள்ள ராஜேந்திர சோழன் சமாதி ஆகியவற்றை ஒருங்கிணைத்து சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கூட்டத்தில் பங்கேற்றோர் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.

    இவற்றுக்கு பதிலளித்த சார் ஆட்சியர் த.பிரபுசங்கர், கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றும், செய்யாறு நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து உதவிட வேண்டும் என்றும் கூறினார்.

    இதில், வட்டாட்சியர்கள் (செய்யாறு) ரெஹானாபேகம், (ஆரணி) தமிழ்மணி, நகராட்சிப் பொறியாளர் டி.தமயந்தி, சுகாதார ஆய்வாளர் மதனராசன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் செந்தில்குமார், பொதுப்பணித் துறை பொறியாளர் முருகன், மின்வாரிய பொறியாளர் செல்வராஜ், பேருந்து பணிமனை மேலாளர் விநாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும், செய்யாறு ரிவர் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் பி.நடராஜன், செயலர் கே.கோபிராஜ், மாவட்டத் தலைவர் வி.தெய்வசிகாமணி, நகர லயன்ஸ் சங்கத் தலைவர் வீ.தீனதயாளன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai