Enable Javscript for better performance
ரூ.21 லட்சம் சீட்டு பணம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.21 லட்சம் சீட்டு பணம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் புகார்

    By திருவண்ணாமலை  |   Published on : 05th August 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் ரூ.21 லட்சம் சீட்டு பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

    திருவண்ணாமலை, துராபலி தெருவைச் சேர்ந்தவர் ஆர்.பி.சண்முகம். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். பணியில் இருந்தபோது தன்னுடன் பணிபுரியும் ஊழியர்கள், நண்பர்களைச் சேர்த்து ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம்.

    இவரிடம் ஏராளமானோர் மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளனர். இவர்களில், திருவண்ணாமலை அருணைகிரிபுரம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன், வேங்கிக்கால் சிவக்குமார், சோ.கீழ்நாச்சிப்பட்டு எத்திராஜி, நல்லவன்பாளையம் காஞ்சனா, ஊசாம்பாடி பாலகிருஷ்ணன், சோமாசிப்பாடி செல்வபதி, திருவண்ணாமலை உஷா ஆகியோருக்கு மட்டும் ரூ.21 லட்சம் சீட்டு பணம் தர வேண்டுமாம்.

    இந்தப் பணத்தை தராமல் சண்முகம் காலம் கடத்தி வந்தாராம். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களுக்குச் சேர வேண்டிய ரூ.21 லட்சம் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும். பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.பி.சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai