Enable Javscript for better performance
ஆரணி அருகே கல்குவாரி அலுவலகம் சூறை: கிராம மக்கள் ஆவேசம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி அருகே கல்குவாரி அலுவலகம் சூறை: கிராம மக்கள் ஆவேசம்

    By ஆரணி  |   Published on : 09th August 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி அருகே இயங்கி வரும் கல்குவாரியால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் குவாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, குவாரி அலுவலகத்தை சூறையாடினர்.

    ஆரணியை அடுத்த ஒண்ணுபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வி.வி.தாங்கல் என்ற பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரியில் இரவும் பகலும் வெடி வைத்து கல் உடைப்பதாகவும் மிகுந்த சத்தத்துடன் வீடுகளின் மீது கல் விழுகிறது என்றும், அதிர்வினால் வீடுகள், பள்ளி கட்டடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இதுதவிர, சிமென்ட் கலவை செய்வதாலும், தார் ஜல்லி கலவை செய்வதாலும், ஜல்லி உடைப்பதாலும் ஏற்படும் தூசியால்லும்,  வெடி மருந்து வைத்து வெடி வைத்து கல் உடைப்பதாலும் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்படுவதாகவும் புகாராக கூறிவந்தனர்.

     மேலும், குவாரியில் சுமார் 70க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் ஜல்லிக் கற்களையும், சிமென்ட் கலவையையும் ஏற்றிச் செல்வதால் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால், பள்ளி வாகனங்கள் ஊரினுள் சரிவர வருவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஒன்றுகூடி குவாரியின் முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், அவர்கள் குவாரி அலுவலகத்தினுள் புகுந்து கணினி, நாற்காலி, மேஜை போன்றவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

     மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஒப்படைத்துவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேறி விவசாயப் பகுதிக்குச் சென்று விடுவதாகவும் கூறினர். மேலும், இந்த குவாரியை அகற்றும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai