Enable Javscript for better performance
ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்னா- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்னா

    By வந்தவாசி  |   Published on : 10th August 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 123 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை மற்றும் 6 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.

    இந்நிலையில், இந்தப் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஒருவர், கடந்த மாதம் கல்வித் துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினாராம். அதில், உளுந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், ஆசிரியை வ.வளர்மதி ஆகியோர் மாணவர்களிடம் பணம் வசூல் செய்து அனுமதியின்றி இன்ப சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப்பை வழங்காமல் மாணவர்களிடம் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டதாகவும், பள்ளியில் சரிவர பாடம் போதிப்பதில்லை என்றும் அவர் புகார் தெரிவித்திருந்ததாகத் தெரிகிறது. இந்த புகார் தொடர்பாக கல்வித் துறை விசாரணை மேற்கொண்டது.

    இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், கொவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும், ஆசிரியை வ.வளர்மதி, மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் நிர்வாக மாறுதல் செய்து கல்வித் துறை உத்தரவிட்டது. மேலும், கொவளை பள்ளித் தலைமை ஆசிரியை மரகதம் உளுந்தை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அ.முனியம்மாள், வ.வளர்மதி ஆகியோர் இந்த நிர்வாக மாறுதல் உத்தரவுகளை பெற வந்தவாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு செல்லவில்லையாம். இதனால் வந்தவாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து நிர்வாக மாறுதல் உத்தரவுகள் பதிவு தபாலில் இருவருக்கும் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாம்.

    இதனிடையே இடமாற்றம் செய்யப்பட்ட கொவளை பள்ளித் தலைமை ஆசிரியை மரகதம், உளுந்தை பள்ளித் தலைமை ஆசிரியையாக திங்கள்கிழமையே பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், அ.முனியம்மாள், வ.வளர்மதி ஆகியோர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, இந்தப் பள்ளியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆசிரியைகள் இருவரையும் மீண்டும் இந்தப் பள்ளியிலேயே பணியமர்த்த கோரி கோஷமிட்டனர். மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    தகவலறிந்து வந்த வந்தவாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் எ.செல்லப்பன், எஸ்.ராமமூர்த்தி, துணை வட்டாட்சியர் எஸ்.திருமலை, கீழ்க்கொடுங்காலூர் காவல் ஆய்வாளர் ரவி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சமாதானத்தை ஏற்காத மாணவர்கள் புதன்கிழமை மீண்டும் போராட்டத்தை தொடரப்போவதாக கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளி வழக்கம்போல் இயங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai