Enable Javscript for better performance
முதியோர் உதவித் தொகை: வசதி படைத்தோர் விட்டுத்தர வேண்டும்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் உதவித் தொகை: வசதி படைத்தோர் விட்டுத்தர வேண்டும்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

    By ஆரணி  |   Published on : 11th August 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகுதிவாய்ந்த பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெற ஏதுவாக வசதி படைத்தவர்கள் விட்டுத்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலருமான பழனி பேசினார்.

    ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இராட்டிணமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பழனி தலைமையில் தமிழக அரசின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், பட்டா பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பழனி பேசியது:

    இந்த மனுநீதி நாள் முகாமுக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே அனைத்துத் துறை அதிகாரிகள் இராட்டிணமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அவ்வாறு பெற்ற மனுக்கள் மொத்தம் 142. இதில், தேர்வு செய்யப்பட்டது 84 பயனாளிகள். 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களை மறு ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேளாண் துறை சார்ந்த திட்டங்களை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை பயிரிட்டு அன்றாடம் லாபம் அடையுங்கள். இது குறித்து துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து தெரிந்துகொள்ளுங்கள்.

    முதியோர் உதவித் தொகையை தகுதிவாய்ந்த பயனாளிகள் பெறாமல் தவிக்கின்றனர். வசதி படைத்தவர்கள், அரசுத் துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் உறவினர்களுகள் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக சிபாரிசு செய்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக வசதி படைத்தவர்கள் விட்டுக்கொடுத்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

    கடுமையாக உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை பொதுமக்கள் தனியார் சீட்டு நிறுவனத்தில் கொடுத்து ஏமாந்து விடுகிறீர்கள். அரசு சார்பில் புது வாழ்வு திட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன் மூலமாக பயனடையலாம் என்றார்.

    கூட்டத்தில் ஆரணி வட்டாட்சியர் தமிழ்மணி வரவேற்றுப் பேசினார். பல்வேறு அரசு துறை அதிகாரிகள் தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் மக்கள் பயன்பெறத் தேவையான வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

    இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கோபு, வட்ட வழங்கல் அலுவலர் பவானி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஊராட்சித் தலைவர் சி.கைலாசம் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai