Enable Javscript for better performance
12 கொத்தடிமைகள் மீட்பு: செங்கல் சூளை அதிபர் கைது- Dinamani

சுடச்சுட

    

    12 கொத்தடிமைகள் மீட்பு: செங்கல் சூளை அதிபர் கைது

    By வாலாஜாபேட்டை  |   Published on : 11th August 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவேரிப்பாக்கம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வந்த 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

     வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி (56). விவசாயியான இவருக்குச் சொந்தமான நிலம் வேகாமங்கலம் கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்தில் அரசிடம் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. துளசியின் செங்கல் சூளையில் ஆற்காடு, வேகாமங்கலம், கிளார் பகுதிகளைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் 12 பேர் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது.  துளசி அவர்களுக்கு குறைந்த கூலி வழங்கியதாகவும், அங்கு பணிபுரிந்தவர்களை அவர் சித்திரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

     இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த அருணாசலம் (19) திருவலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். தகவல் அறிந்த துளசி தனது அடியாள்களுடன் திருவலத்துக்குச் சென்று அருணாசலத்தை அடித்து, செங்கல் சூளைக்கு இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

     இதுகுறித்து தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், வேகாமங்கலம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துளசியின் செங்கல் சூளையில் ஆய்வு நடத்தினார்.

     அப்போது அங்கு பணிபுரிந்து வந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரிடம் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. மேலும் அருணாசலத்தை துளசி தனது அடியாள்களுடன் திருவலத்தில் இருந்து வேகாமங்கலத்துக்கு அடித்து இழுத்து வந்ததும் தெரியவந்தது.

     இதையடுத்து 12 தொழிலாளர்களும் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் 12 பேருக்கும் தலா ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு, விடுதலைச் சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.

     நெமிலி வட்டாட்சியர் இளஞ்செழியன், வருவாய் அதிகாரி ரேவதி, காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் சுகந்தி, முரளி, நவீன் பாலாஜி, காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர் இன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     இதுகுறித்து வேகாமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், துளசியைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai