Enable Javscript for better performance
ஆசிரியர் அடித்ததில் மாணவரின் காது பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே பள்ளி மைதானத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி, உடற்கல்வி ஆசிரியர் கன்னத்தில் அடித்ததில் மாணவருக்கு காது ஜவ்வு பாதிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை, சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் மில்டன் (40). திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
    இவர், வியாழக்கிழமை பிற்பகல் பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்து மைதானத்தை சுத்தம் செய்யுமாறு கூறினாராம். இதையடுத்து, மாணவர்கள் மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    இந்தப் பணியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் காட்டாம்பூண்டி கிராமம், சின்னையம்பேட்டைத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் ஹரிகரனும் (14)  ஈடுபட்டுள்ளார்.
    இவர், மைதானத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி அவரது கன்னத்தில் ஆசிரியர் ஜான் மில்டன் ஓங்கி அடித்தாராம். இதில் மயங்கி விழுந்த ஹரிகரனுக்கு ஆசிரியர்கள் தண்ணீர் கொடுத்து எழுப்பியுள்ளனர்.
    பின்னர், அதே பள்ளியில் பயிலும் அவரது அக்கா அனிதாவுடன் மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், காது வலியால் பாதிக்கப்பட்ட மாணவரை அவரது தந்தை நாராயணன் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிகரனின் காது ஜவ்வு கிழிந்துள்ளதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, தச்சம்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே நேரத்தில், கல்வித் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai