Enable Javscript for better performance
கலசப்பாக்கம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    By DIN  |   Published on : 15th August 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர் என பெயர் நீக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் உள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் அதே முகவரியில் வசிக்கின்றனர். எனவே, தொகுதியில் முகாம் அமைத்து தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பெயர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    கலசப்பாக்கம் தொகுதி, கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 45 ஊராட்சிகள், போளூர் ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், ஜவ்வாதுமலை ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், புதுப்பாளையம் ஒன்றியத்தின் 37 ஊராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சியை உள்ளடக்கியது. இந்தத் தொகுதியில் மொத்தம் 2,18,563 வாக்காளர்கள் உள்ளனர்.
    போளூர் ஒன்றியத்தில் அனந்தபுரம், வாழியூர், காளசமுத்திரம், குப்பம், படவேடு, கல்குப்பம், கல்பட்டு என 7 ஊராட்சிகள் உள்ளன. இதில், அனந்தபுரம், கைலாசபுரம், திருவேங்கிடபுரம், புதூர், காந்திநகர், முருகாபாடி, பள்ளகொல்லை, வசந்தபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது அனந்தபுரம் ஊராட்சி.
    இந்த ஊராட்சியில் உள்ள புதூர் கிராமத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. மேலும், அனந்தபுரம் ஊராட்சி 6-ஆவது வார்டு உறுப்பினர் மதியழகன் இறந்துவிட்டார் என பெயர் நீக்கம் செய்து கடந்த 2016 மே 16-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    மேலும், பாமக கிளைச் செயலர் ஜி.சரவணன், முன்னாள் ராணுவ வீரர் சி.சேட்டு, அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சென்னையில் காவல் நிலையத்தில் பணிபுரியும் சசிகலா ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
    மேலும், போளூர் ஒன்றியத்திலுள்ள இந்த 7 ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர், நீக்கப்பட்டவர் என
    300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் சார்பில் உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், சரிபார்த்தல் தொடர்பாக இந்தப் பகுதிகளில் முகாம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    தேர்தலை புறக்கணிப்போம்: இது குறித்து போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் கூறுகையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இது போன்ற குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் இருந்தால் தேர்தலை புறக்கணிப்போம் எனத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai