Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்: 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த காஞ்சி, போளூர் அடுத்த பார்வதி அகரம், வேட்டவலத்தை அடுத்த பன்னியூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    காஞ்சி: செங்கத்தை அடுத்த காஞ்சியில் நடைபெற்ற முகாமில் காஞ்சி, காரப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 130 மனுக்களை அளித்தனர். பின்னர், மனுக்கள் மீது வருவாய்த் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
    இதையடுத்து, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் மீனாகுமாரி புருசோத்தமன் தலைமை வகித்தார். செங்கம் சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, 80 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
    கூட்டுறவு சங்கத் தலைவர் துரை, கவுன்சிலர் தவமணி, மண்டல துணை வட்டாட்சியர் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் காசி, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    பார்வதி அகரம்: போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பார்வதி அகரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டாட்சியர் புவனேஸ்வரி தலைமை வகித்து, 34 மனுக்களை பெற்றார். பின்னர், 14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
    சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிளியம்மாள்கலைமணி மற்றும் பொதுமக்கள், வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.
    பன்னியூர்: வேட்டவலத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு, வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கலையரசி, ஊராட்சித் தலைவர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கீழ்பென்னாத்தூர் வட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுப்பிரமணியன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றார்.
    பெறப்பட்ட மொத்தம் 54 மனுக்களில், 28 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகம், அஞ்சலாமேரி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai