Enable Javscript for better performance
காணாமல் போன இளைஞர் காட்டில் அடித்துக் கொலை: சடலம் சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    காணாமல் போன இளைஞர் காட்டில் அடித்துக் கொலை: சடலம் சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு

    By DIN  |   Published on : 08th October 2016 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த கோனாமங்கலத்தில் காணாமல்போன இளைஞர் அருகே உள்ள விசாமங்கலம் காட்டுப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
    சேத்துப்பட்டை அடுத்த கோனாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கார்த்திகேயன் மற்றும் சுந்தரமூர்த்தி (24) என 2 மகன்கள் இருந்தனர்.
    இதில், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த சுந்தர மூர்த்தி, கடந்த ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. திருமணமாகாத இவர் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வாராம். அதேபோல், வேலைக்காக வெளியூர் சென்றிருக்கலாம் என பெற்றோர் எண்ணியிருந்தனர். எனினும், சுந்தரமூர்த்தி சென்றதில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். மேலும், அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.
    இந்நிலையில், கோனாமங்கலம் அருகே உள்ள விசாமங்கலம் காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை மாலை ஆடு மேய்க்கச் சென்ற பெண், அந்தப் பகுதியில் கிடந்த ரத்தக்கறை படிந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, இது குறித்த தகவலை அவர், கிராம மக்களிடம் தெரிவித்தார். பின்னர், இது குறித்த தகவல் சேத்துப்பட்டு போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, போளூர் துணை போலீஸ் சூப்ரெண்டு கோட்டீஸ்வரன், சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸார் காட்டுப்பகுதிக்கு சென்று, மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் இருந்தது தெரியவந்தது.
    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்பு காணாமல்போன சுந்தரமூர்த்தி என்பதும், அவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி விசாமங்கலம் காட்டுப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
    இதைத் தொடர்ந்து, சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சுந்தரமூர்த்தியின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai