Enable Javscript for better performance
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில்ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் விரிசல்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில்ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் விரிசல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் சிறு, சிறு விரிசல்கள் இருந்ததை லண்டனைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் கண்டறிந்தனர்.
    திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் திருப்பணிகள் நடைபெற்ற போது, சுமார் 10 டன் எடை கொண்ட பாறையைத் தாங்கிப் பிடிக்கும் கருங்கல்லில் விரிசல் ஏற்பட்டிருந்தது கடந்த ஜூலை 22-இல் தெரியவந்தது.
    தகவலறிந்த, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சென்னை ஐஐடி பேராசிரியர் அருண்மேனன் உள்ளிட்டோர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் ராஜகோபுர விரிசலைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    கற்களைத் தைக்கும் பணி தொடக்கம்: நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராஜகோபுர கருங்கற்களைத் தைப்பது என்றும், இதற்காக துருப்பிடிக்காத இரும்பு, எஃகு கம்பிகளை பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    அதன்படி, லண்டனைச் சேர்ந்த சின்டெக் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்திடம் விரிசல் ஏற்பட்ட கருங்கல்லை தைக்கும் பணியை அறநிலையத் துறை ஒப்படைத்தது.
    மேலும் 5 விரிசல்கள்: இந்த நிலையில், சின்டெக் கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் வியாழக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனர். அவர்கள் சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் சத்யதர்க் சர்மாவின் ஆலோசனைகளைப் பெற்று ராஜகோபுர விரிசலை சரிசெய்யும் பணியைத் தொடங்கினர்.
    அப்போது, ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் சிறு, சிறு விரிசல்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    அவர்களின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே ஏற்பட்ட பெரிய விரிசல், தற்போது கண்டறியப்பட்டுள்ள 5 சிறிய அளவிலான விரிசல்கள் என மொத்தம் 6 விரிசல்களையும் இரும்பு, எஃகு கம்பிகளைக் கொண்டு தைக்கும் பணியில் லண்டன் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
    ஆணையர் ஆய்வு: இதற்கிடையே, விரிசலை சரிசெய்யும் பணியையும், கோயிலில் நடைபெற்று வரும் பல்வேறு திருப்பணிகளையும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீர.சண்முகமணி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அப்போது, கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உபயதாரர்களை கேட்டுக் கொண்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai