Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பின் பிடியில் திருவண்ணாமலை பேருந்து நிலையம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பின் பிடியில் திருவண்ணாமலை பேருந்து நிலையம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

    By சா.சரவணப்பெருமாள்  |   Published on : 15th October 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயணிகளுக்கு இடையூறாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துள்ளது.
    சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலுக்கு விழாக்காலங்களில் மட்டுமின்றி சாதாரண நாள்களிலும்கூட வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, செல்கின்றனர்.
    இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலும் பேருந்துப் பயணத்தையே விரும்புகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் மேல்மலையனூரில் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தைக் காண திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளும் பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
    அடிப்படை வசதிகள் இல்லை: இந்தப் பேருந்து நிலையத்தில் விழுப்புரம், திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள ஒரே ஒரு குடிநீர்த் தொட்டியில் இருந்து சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சேலம், திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டி உடைக்கப்பட்டுள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய முன்வரவில்லை.
    எனவே, பேருந்து நிலையத்தில் தேவையான அளவு குடிநீர்த் தொட்டிகளை அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
    திறந்தவெளி கழிப்பிடமாக...: சென்னை பேருந்துகள் நிற்கும் பகுதி திறந்தவெளி சிறுநீர், மலம் கழிக்கும் இடமாகவே மாறிவிட்டது. கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பலர் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.இது பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
    பெயர்ப் பலகை இல்லை: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலைய நுழைவு வாயில், வேலூர் பேருந்துகள் வெளியே வரும் வாயில் என 2 இடங்களில் பேருந்து நிலையத்தை குறிப்பிடும் வகையில் டிஜிட்டல் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்ப் பலகைகள் பல மாதங்களாக கிழிந்த நிலையில் உள்ளன. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்கு வரும் வெளியூர் பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
    அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத் தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா, பேருந்து நிலையத்துக்குள் உள்ள நகராட்சிக் கடைகளின் வாசலில் மஞ்சள் கோடு போட்டார். மஞ்சள் கோட்டைத் தாண்டி கடைக்காரர்கள் யாரும் தங்களது கடைகளை விரிவுபடுத்தக்கூடாது என்று எச்சரித்தார்.
    இதையும் மீறி தங்களது கடைகளை விரிவுபடுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் குறைந்திருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து
    வருகின்றன.
    பயணிகள் நடந்து செல்லக்கூட நடைபாதை இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. வெயில், மழையில் கூட பயணிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பயணிகள் நிற்கும் நிழற்கூடையில்கூட சில தினங்களாக பெரிய அளவிலான குளிர்பானக் கடைகள், பூக்கடைகள், வடை மற்றும் போண்டா விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    குறிப்பாக, வேலூர், திருக்கோவிலூர், விழுப்புரம், பெங்களூரு பேருந்துகள் நிற்கும் இடங்களில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே, திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai