Enable Javscript for better performance
கால்வாயில் அடைப்பு: தூர்வாரிய பொதுமக்கள்!- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு பேரூராட்சியில் அடைப்பு ஏற்பட்ட கால்வாயை  பொதுமக்களே சுத்தம் செய்தனர்.
    சேத்துப்பட்டு பேரூராட்சி, 16-ஆவது வார்டில் உள்ள லூர்து நகர் இருதய ஆண்டவர் தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கடந்த வாரம் பெய்த மழையின்போது கழிவு நீர் வெளியேறி இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.
    இந்தப் பகுதியில் உள்ள சவேரியார் தெரு, சூசையப்பர் தெரு, கோவிந்தன் தெரு, மாதா கோயில் தெரு ஆகியவற்றில் உள்ள கழிவு நீர் இருதய ஆண்டவர் தெருவில் உள்ள கால்வாயின் வழியாகத்தான் கண்ணணூர் ஏரிக்கு செல்கிறது. இந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால், இருதய ஆண்டவர் தெரு பகுதியை கழிவு நீர் சூழும் அபாயம் உள்ளது.
    கடந்த வாரம் பெய்த மழையில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், இது குறித்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்து, கால்வாயை துப்புரவுப் பணியாளர்கள் வந்து சுத்தம் செய்தனர். எனினும், கால்வாய் சிறியதாக உள்ளதால், மீண்டும் பெய்த மழையால் கழிவு நீர் தேங்கியது.
    இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து கால்வாயை ஆக்கிரமித்திருந்த முள்புதர்களை அகற்றி, ஏரி வரை கழிவுநீர் செல்லும் வகையில் வியாழக்கிழமை சுத்தப்படுத்தினர்.
    களத்தில் இறங்கிய வேட்பாளர்கள்: இது குறித்து தகவலறிந்த தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள 16-ஆவது வேட்பாளர்கள் ரொசாரியோ, ஜான்கிருஸ்டி ஆகியோர் மக்களோடு மக்களாக தாங்களும் சேர்ந்து கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    மேலும், இந்தக் கால்வாயை அகலப்படுத்தி புதிய கால்வாய் அமைத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம் என பொதுமக்களிடம் அவர்கள் உறுதி கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai