Enable Javscript for better performance
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிச.3-ல் தொடக்கம்: சிறப்பாக நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிச.3-ல் தொடக்கம்: சிறப்பாக நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

    By DIN  |   Published on : 15th October 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தொடர்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
    அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 30-ஆம் தேதி ஸ்ரீதுர்க்கையம்மன் உற்சவமும், டிசம்பர் 1-ஆம் தேதி ஸ்ரீபிடாரியம்மன் உற்சவமும், டிசம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெறுகின்றன.
    கொடியேற்றத்துடன் தொடக்கம்: டிசம்பர் 3-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 8-ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 9-ஆம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் தொடங்குகின்றன.
    விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    3 நாள் தெப்பல் உற்சவம்: தொடர்ந்து, டிசம்பர் 13-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 14-ஆம் தேதி இரவு ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 15-ஆம் தேதி இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
    ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார்.
    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மா.ரங்கராஜன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நா.குணசேகரன் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    கூட்டத்தில், கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வை கோயில் திருக்கல்யாண மண்டபம், வடக்கு கட்டை கோபுரம் அருகே உள்ள கலையரங்கம், திருவண்ணாமலை நகரில் அமைக்கப்படும் 6 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மெகா திரைகள் வைத்து ஒளிபரப்புவது என முடிவு செய்யப்பட்டது.
    மேலும், பரணி தீப தரிசனத்துக்கு டிசம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணி வரை கோயில் கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண மேற்கு கோபுரம் வழியாக மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
    மேலும், அனைத்து அரசுத் துறைகள் சார்பில் தேவையான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்வது எனவும், தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்தி முடிப்பது எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில், அரசின் அனைத்துத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai