வந்தவாசியை அடுத்த செட்டிக்குளம் கிராமத்தில் மூடப்பட்ட மதுக் கடையைத் திறக்கக் கோரி அந்தப் பகுதி மக்களில் சிலர் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
தெள்ளாறு - தேசூர் சாலைப் பகுதியில் செட்டிக்குளம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் கடந்த மே 14-ஆம் தேதி மதுக் கடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி வருவாய்த் துறையினர், தெள்ளாறு போலீஸார் அங்கு வந்து 15 நாள்களுக்குள் மதுக் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், உறுதியளித்தபடி மதுக் கடை மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்ததால் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதுக் கடையை உடனடியாக மூடக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த மதுக் கடை உடனடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், மூடப்பட்ட அந்த மதுக் கடையை மீண்டும் திறக்கக் கோரி செட்டிக்குளம், கூனம்பாடி கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ்.முருகனிடம் மனு அளித்தனர். மேலும், மனு அளிக்க வந்தோர் தங்களது குடும்ப அட்டை நகல்களை மனுவுடன் இணைத்திருந்தனர்.
இந்த மதுக் கடையால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. மதுக் கடை இயங்கும் இடத்தின் உரிமையாளர் மீது சிலருக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் உள்ளது. ஆகையால்தான் மதுக் கடையை மூடக் கோரி போராட்டம் நடைபெற்றது.
எனவே மூடப்பட்ட அந்த மதுக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை அளித்துவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் மதுக் கடையை மீண்டும் திறக்கக் கோரி முழக்கமிட்டபடி சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.