போளூரை அடுத்த கரைப்பூண்டி பகுதியில் பாயும் செய்யாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
எனவே, இந்தப் பகுதியில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, போலீஸார் ரோந்து சென்று மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாது மலைத்தொடரில் உருவாகி செங்கம், கலசப்பாக்கம், கரையாம்பாடி, கரைப்பூண்டி, மண்டகொளத்தூர், தச்சூர் என பல்வேறு ஊர்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது செய்யாறு.
போளூரை அடுத்த கரைப்பூண்டி பகுதியில் பாயும் செய்யாற்றில் தினந்தோறும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், லாரிகளில் மர்ம நபர்கள் மணலை திருடிச் செல்கின்றனர்.
மேலும், மணல் திருட்டில் ஈடுபடுவோர், ஆற்றிலேயே கூலி ஆள்கள் மூலம் பகல் வேளைகளில் மணலை சலித்து, தூய்மைப்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள முள்புதர்களில் மறைத்து வைக்கின்றனர். லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் ஏற்றுவதற்குத் தேவையான அளவு மணல் சேர்ந்தவுடன் மணலை மர்ம நபர்கள் அள்ளிச் செல்கின்றனர். இந்நிலையில், மணல் திருட்டு குறித்து புகார் தெரிவித்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விவசாயம் அழியும்: இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டார கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனி கூறியதாவது:
கரைப்பூண்டி பகுதியில் உள்ள செய்யாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்தப் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டால், மணல் திருட்டில் ஈடுபட முடியாது என்பதால், இதில் ஈடுபட்டுள்ளோர் தடுப்பணைகள் கட்ட தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், அதிகாரம் மிக்கவர்கள் மணல் திருட்டில் ஈடுபடுவதாலும், அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாலும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுகிறது.
இதுகுறித்து வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினருக்கு தகவல் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதால், விரைவில் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அழியும் நிலை ஏற்படும் என்றார்.
"வருவாய்த் துறையினர் ரோந்து செல்கின்றனர்'
இதுகுறித்து போளூர் வட்டாட்சியர் புவனேஸ்வரி கூறியதாவது: கரைப்பூண்டி பகுதியில் பாயும் செய்யாற்றில் மணல் திருட்டை தடுக்க வருவாய்த் துறையினரை ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட வைத்துள்ளோம். மேலும், இரவு நேரங்களில் என்னுடன் அலுவலர்களை அழைத்துக்கொண்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.