மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 500-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின்
Published on
Updated on
1 min read

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் பேரம் பேசியது தொடர்பாக ஊடகங்களில் வந்த புகார் மீது விவாதம் நடத்த திமுகவினர் கோரினர்.
இதற்கு சட்டப் பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால், அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். உடனே அவர்கள், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சட்டப் பேரவை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை, காந்தி சிலை எதிரே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலர் பாரதி ராமஜெயம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, சேஷா.திருவேங்கடம், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் இர.செல்வராஜ், அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசி: இதேபோல, வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்ல முடியவில்லை. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 41 பேரை வந்தவாசி தெற்கு போலீஸார் கைது செய்தனர்.
ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், தட்சிணாமூர்த்தி, சுந்தர், நகரச் செயலர் ஏ.சி.மணி உள்பட 63-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 63-க்கும் மேற்பட்டோரை ஆரணி போலீஸார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் திமுக நகரச் செயலர் முருகன் தலைமையில், ஒன்றியச் செயலர்கள் மனோகரன், எழில்மாறன் உள்பட சுமார் 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
சந்தவாசல்: சந்தவாசல் ஊராட்சியில் வேலூர் - திருவண்ணாமலை சாலையில் போளூர் வடக்கு ஒன்றியச் செயலர் சுப்பிரமணி தலைமையில், ஒன்றிய துணைச் செயலர் சாந்தமூர்த்தி உள்பட திமுகவினர் 150 பேர் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை சந்தவாசல் போலீஸார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்ட திமுகவினர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com