திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தில் உள்ள விவசாயிகள், சிறு விவசாயிகளுக்கு வீடு தேடிச் சென்று சிறு விவசாயி சான்று வழங்குங்கள் என்று வருவாய்த் துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் இனாம்காரியந்தல், முனியந்தல், வெங்காயவேலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு திருவண்ணாமலை வட்டாட்சியர் ஆர்.ரவி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
மண்டல துணை வட்டாட்சியர் அமுல் வரவேற்றார். முகாமில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
திருவண்ணாமலையில் விரைவில் நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும். இது நாட்டுக்கு சேவை செய்ய இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு.
சிறு விவசாயி சான்று கேட்டு விண்ணப்பிப்போருக்கு மட்டுமல்லாமல், மற்ற சிறு விவசாயிகளுக்கும் வருவாய்த் துறை அலுவலர்கள் தாங்களாகவே நேரில் சென்று சான்று வழங்க வேண்டும். சிறு வயது திருமணங்களை பெற்றோர் நடத்தக் கூடாது. சிறுவர்களை பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, 152 பயனாளிகளுக்கு ரூ.4.53 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார். முகாமில், வேளாண் உதவி இயக்குநர் எம்.செல்வராஜ், வேளாண் உதவி அலுவலர்கள் எம்.ஜெயராமன், எம்.செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தனி வருவாய் ஆய்வாளர் த.விஜயரங்கன், முன்னாள் ஊராட்சித் தலைவர் இரா.பத்ராசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.