கலசப்பாக்கம் அருகே டாஸ்மாக் மதுக் கடையை இட மாற்றம் செய்யக் கோரி, அந்தக் கடையை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, கோயில் உள்ளன. பொதுமக்கள், பக்தர்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் இந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விரைவில் மதுக் கடை இட மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை இட மாற்றம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், புதன்கிழமை மதுக் கடையை 2-ஆவது முறையாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 3 தினங்களுக்குள் மதுக் கடை வேறு பகுதிக்கு இட மாற்றம் செய்யப்படும் என்று போலீஸார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.