அருணாசலேஸ்வரர் கோயில் அமர்வு தரிசனக் கட்டணம்: உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க எ.வ.வேலு கோரிக்கை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசனத்துக்கு ரூ.250 கட்டணம் வசூலிப்பதில் இருந்து உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏ எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசனத்துக்கு ரூ.250 கட்டணம் வசூலிப்பதில் இருந்து உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏ எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: 1,500 ஆண்டுகள் பழைமையானது திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில். சோழர், பல்லவர், ஒய்சாலர், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலங்களில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோயிலில் நடைபெறும் விழாக்களில் பெரும்பங்கு உள்ளூர் பக்தர்கள், உபயதாரர்களுக்கு உள்ளது.
உபயதாரர்கள் மூலமாகவே பல்வேறு திருப்பணிகள், விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சன்னதியில் அமர்வு தரிசனம் செய்ய ரூ.250 கட்டணம் வசூலிக்க ஆணை பிறக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அறநிலையத் துறையின் இந்தச் செயல், திருவண்ணாமலை நகர மக்களின் அன்றாட ஆன்மிக நடவடிக்கைகளுக்கு எதிரானது. திருவண்ணாமலை நகர மக்களின் உழைப்பால் வளர்ந்த கோயிலுக்கு கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிப்பது உள்ளூர் மக்களுக்கு அபராதம் வசூலிப்பதற்கு ஒப்பாகும்.
எனவே, உள்ளூர் பக்தர்களுக்கும் ரூ.250 கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இந்தக் கட்டணம் மிக அதிகம். எனவே, வெளியூர் பக்தர்களுக்கு இந்தக் கட்டணத் தொகையை குறைக்க வேண்டும்.
மேலும், அமர்வு தரிசனத்துக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை உடனே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும். இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
பேட்டியின்போது, மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, சேஷா.திருவேங்கடம், ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், சி.மாரிமுத்து, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com