செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தின் உள் பகுதியில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகக் கட்டடத்தில் கடை வைத்திருப்பவர்கள் கடையின் முன் சுமார் 10 அடி நீளத்துக்கு பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு, அதில் பழம், கூழ், பானிபூரி போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சில பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமலேயே வெளியில் உள்ள பிரதான சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன. இதனால் குறித்த நேரத்துக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்களும், பயணிகளும், வியாபாரிகளும் எதிர்பார்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.