திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 12 நவீன இயந்திரங்களுடன் கூடிய புதிய சிறுநீரக குருதி பகுப்பாய்வு பிரிவை (டயாலஸிஸ்) சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுநீரக குருதி பகுப்பாய்வு பிரிவு (டயாலஸிஸ்) தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயந்தி வரவேற்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ரூ. ஒரு கோடி ரூபாயில் 12 நவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக குருதி பகுப்பாய்வு பிரிவைத் தொடக்கி வைத்துப் பேசினர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறுநீரக குருதி பகுப்பாய்வுப் பிரிவில் 12 நவீன இயந்திரங்கள் உள்ளன. இந்தப் பிரிவுக்கு மட்டும் பயிற்சி பெற்ற 4 உதவி மருத்துவர்கள், 9 செவிலியர்கள், 2 டயாலஸிஸ் தொழில்நுட்ப நிபுனர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு இந்த மையம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
தமிழகத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,464 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை தற்போது சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் விரைவில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும். பின்னர், அனைத்து நகரங்களிலும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.