திருவண்ணாமலையில் பெண் விற்பனைப் பிரதிநிதி கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநில இளைஞர், பெண் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, புதுத் தெரு, 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி மஞ்சுளா (42). வேணுகோபால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு தனது மகன்கள் வரபிரசாத் (28), தங்கபிரசாத் (25) ஆகியோருடன் மஞ்சுளா வசித்து வந்தார்.
அண்மையில் 2 மகன்களுக்கும் சென்னையில் வேலை கிடைத்தது. இதையடுத்து, சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் வரபிரசாத் வேலைக்குச் சென்றார். சென்னையில் பொறியாளராக தங்க பிரசாத் வேலைக்குச் சேர்ந்தார்.
எனவே, மஞ்சுளா மட்டும் திருவண்ணாமலையில் தனியே வசித்து வந்தார். மஞ்சுளாவிடம் அவரது மகன்கள் தினமும் செல்லிடப்பேசி மூலம் பேசுவது வழக்கமாம். ஆனால், சில நாள்களாக மஞ்சுளாவின் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.
இதனால் சந்தேகமடைந்த மூத்த மகன் வரபிரசாத் கடந்த 21-ஆம் தேதி இரவு திருவண்ணாமலைக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது, வீடு பூட்டப்பட்டிருந்ததுடன், வீட்டினுள் இருந்து துர்நாற்றமும் வீசியதாம்.
சந்தேகமடைந்த வரபிரசாத், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மஞ்சுளா இறந்து கிடந்தாராம். இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். முதல்கட்ட விசாரணையில், மஞ்சுளாவின் கழுத்தில் காயம் இருந்ததால், அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்: போலீஸாரின் விசாரணையில், மஞ்சுளா பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்ததும், சில வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு பொருள்களை எம்எல்எம் (சங்கிலி தொடர்) முறையில் வாங்கி, விற்கும் விற்பனைப் பிரதிநிதியாகவும் இருந்தது தெரியவந்தது. எனவே, இதன் மூலம் யாரிடமாவது மஞ்சுளாவுக்கு முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.
பெண் உள்பட 3 பேர் கைது: இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக திருவண்ணாமலை, இடுக்குப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாரதிராஜா மனைவி ஜெனீபர் (36), திருவண்ணாமலையை அடுத்த எடப்பாளையம் கிராமம், திருநாவுக்கரசர் மகன் தண்டபாணி (25), திருவண்ணாமலை கடலைகடை சந்து பகுதியில் தங்கி, செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்சிங் மகன் பவர்சிங் (24) ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பணத்தை திருப்பிக் கேட்டதால் கொலை: மஞ்சுளாவிடம் ஜெனீபர் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம். இந்தப் பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பித் தருமாறு கேட்டு மஞ்சுளா தகராறு செய்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாம். இதையடுத்து, ஜெனீபர் தனது நண்பர்களான தண்டபாணி, பவர்சிங் ஆகியோருடன் சேர்ந்து மஞ்சுளாவை கொன்றது தெரியவந்தது.
மேலும், மஞ்சுளாவிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற 19 பவுன் தங்க நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் திருவண்ணாமலை ஜெ.எம்.1-ஆவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.