பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ராதாகிருஷ்ணனின் சிறப்புகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.
வேடியப்பனூர்: திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை அக்ரட் டிரஸ்ட் இணைந்து பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழாவை கொண்டாடின. பள்ளித் தலைமை ஆசிரியர் ச.சசிகலைகுமாரி தலைமை வகித்தார். திருவண்ணாமலை அக்ரட் டிரஸ்ட் செயலர் ந.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
ஓய்வு பெற்ற திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கு.மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நல்லாசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசினார்.
இதில், திருவண்ணாமலை இளந்தளிர் அமைப்பின் நிர்வாகிகள் கோபி, மனீஷ், ஆசிரியர்கள் ரவி, கவுரி, மகாலட்சுமி, தனலட்சுமி, சேகர், குமார், உமாராணி, பிரியா, சாவித்திரி உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேட்டவலம்: வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை ஜெயந்தி முன்னிலை வகித்தார். 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களை 80 சதவீதத் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், உதவித் தலைமை ஆசிரியர் செந்தில்நாதன், முதுகலை ஆசிரியர்கள் சுரேஷ்குமார், சிவப்பிரகாசம், சம்பத், ஏழுமலை, பட்டதாரி ஆசிரியர் தெய்வ சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, வேட்டவலம் புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆரோக்கிய கிரேஸி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராபர்ட் முன்னிலை வகித்தார். டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பள்ளி வளாகத்தில் விதைப் பந்துகள் தூவப்பட்டன. விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
போளூர்: சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெரியநாயகி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். மேலும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு அவர் சான்று, பரிசு வழங்கிப் பாராட்டினார்.
பட்டிமன்றப் பேச்சாளர் முத்துவேலன், கலங்கரை விளக்கம் என்ற தலைப்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சின்னதுரை, பொருளாளர் ஜெயராமன், உதவித் தலைமை ஆசிரியர்கள் ராஜகோபால், சடகோபன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சனிக்கவாடி அரசு நடுநிலைப் பள்ளி: இதேபோல, சனிக்கவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏழுமலை தலைமை வகித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து பேசினார். மேலும், ஆசிரியர் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற ஆசிரியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
பின்னர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் விஜய்பாபு நன்றி கூறினார்.
செய்யாறு: செய்யாறு டெம்பிள்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 100 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்யாறில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.ஏ.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பாளராக செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் பொ.கிருபானந்தம் கலந்து கொண்டு ஆசிரியர்களைப் பாராட்டி, பரிசாக புத்தகம் வழங்கினார்.
அனக்காவூர் ஒன்றிய கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் கே.வேலு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி.இரங்கநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.சக்திவேல் ஆகியோர் பங்கேற்று ஆசிரியர்களைப் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஆர்.தேன்மொழி, ஆசிரியர் பி.சங்கரன், நடப்புக் கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர் ரே.கருணாநிதி ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவித்து கௌரவித்தனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.கருப்பையா, ரோட்டரி நிர்வாகிகள் டி.மணி, எஸ்.ஏ.அன்வர்பெய்க், ஆர்.மோகனம், பி.எஸ்.ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: செய்யாறு ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.இளங்கோ தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் டி.பக்தவச்சலு முன்னிலை வகித்தார். முதல்வர் சி.ராமமூர்த்தி வரவேற்றார்.
ரோட்டரி சுகுமார் பங்கேற்று ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஸ்ரீசக்தி கல்வி அறக்கட்டளைத் தலைவர் பி.அருள்குமார், இயக்குநர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com