குப்பனத்தம் அணையைத் திறக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
By DIN | Published on : 01st March 2017 09:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செங்கம் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், குப்பனத்தம் அணையை திறக்கக் கோரி, செங்கம் வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பருவமழை பொய்த்ததால், தற்போது இந்தப் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.
மேலும், செங்கம் நகருக்கு செய்யாற்றில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பேரூராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மழை இல்லாததால் செய்யாற்றில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.
எனவே, செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணையைத் திறக்க வேண்டும். இதன் மூலம் செங்கத்தில் உள்ள செய்யாற்றில் தண்ணீர் சென்றால் செங்கம் பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கும். மேலும், விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்து கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்.
எனவே, குப்பனத்தம் அணையை திறக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் செங்கம் வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.