சுடச்சுட

  

  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிப்பு

  By DIN  |   Published on : 01st March 2017 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டத்தில் ரூ.1,200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
  வங்கித் துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர் ஐக்கிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
  அதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலும் 287 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளை முன் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில துணைப் பொதுச்செயலர் சி.அன்பழகன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டதை வங்கி அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலர் இளஞ்செழியன் தொடக்கி வைத்தார். போராட்டத்தின்போது, வங்கித் துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். வங்கிப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷமிட்டனர்.
  ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிப்பு: பின்னர், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில துணைப் பொதுச்செயலர் சி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்கி ஊழியர்கள் போராட்டதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
  போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் சங்கச் செயலர் பி.கே.கோவிந்தராசன் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுத் துறை, தனியார் துறையைச் சேர்ந்த வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai