Enable Javscript for better performance
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக் கோரி 22 இடங்களில் பாமகவினர் போராட்டம்: 380 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக் கோரி 22 இடங்களில் பாமகவினர் போராட்டம்: 380 பேர் கைது

    By DIN  |   Published on : 02nd March 2017 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக் கோரி, 22 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 380 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 2,700 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக் கோரி, பாமகவினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன் அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டியும், கடையை முற்றுகையிட்டும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டத்துக்கு மாநில பிரசாரக் குழுத் தலைவர் கோ.எதிரொலிமணியன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலர் இரா.காளிதாஸ் முன்னிலை வகித்தார். வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் லோ.சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.பக்தவச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
    ஆரணி: ஆரணி மணிக்கூண்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் மதுபானக் கடையை மூடக் கோரி, பாமகவினர் கோஷமிட்டனர். மேலும், டாஸ்மாக் கடையின் பெயர்ப்பலகையின் மீது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினர்.
    போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிச்சாண்டி, மெய்யழகன், கலைமணி, வடிவேலு, கருணாகரன், ராஜேந்திரன், அருள்பிரகாசம், வி.எஸ்.வெங்கடேசன், ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை ஆரணி நகர போலீஸார் கைது செய்தனர்.
    செய்யாறு: செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடை முன் பாமக மாநில துணைத் தலைவர் தி.க.காத்தவராயன் தலைமையில், சுமார் 30 பேர் போராட்டம் நடத்தியதுடன், அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை போலீஸ் தடுப்பையும் மீறி ஒட்டினர்.
    பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 30 பேரை செய்யாறு போலீஸார்  கைது செய்தனர். இதே போன்று, தூசி கிராமத்தில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலர் கார்த்தி தலைமையில் 11 பேரையும், மாங்கால் கூட்டுச்சாலையில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலர் யசோதரன் தலைமையில் 11 பேரையும், அசனமாப்பேட்டையில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலர் காந்தி தலைமையில் 4 பேரையும், வெம்பாக்கத்தில் தெற்கு ஒன்றியச் செயலர் கார்த்திகேயன் தலைமையில் 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
    செங்கம்: செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையில் குயிலம் கூட்டுச்சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடை முன் பாமக இளைஞரணி மாநில துணைச் செயலர் சுரேஷ் தலைமையில், அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியச் செயலர்கள் வினாயகம், முருகன், சிவா, முன்னாள் ஒன்றியச் செயலர்கள் ஜோதி, புகழேந்தி உள்பட 37 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    வந்தவாசி: வந்தவாசி நகரில் உள்ள அச்சரப்பாக்கம் சாலை, காந்தி சாலை, பஜார்வீதி மற்றும் மும்முனி புறவழிச்சாலை, தெள்ளாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடை பெயர் பலகைகள் மீது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் அ.கணேஷ்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. துரை, மாவட்டச் செயலர் க.சீனிவாசன், மாவட்ட அமைப்புச் செயலர் ஈ.பிச்சைக்கண்ணு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சக்திவேல், வன்னியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் ப.மச்சேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ர.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    இதையடுத்து, வந்தவாசி, தெள்ளாறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மொத்தம் 71 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    இதேபோல, மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாமகவினர் 380 பேரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai