சுடச்சுட

  

  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல்

  By DIN  |   Published on : 02nd March 2017 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 30 பேர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கல்லூரிக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். நெடுவாசல் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் உடனே வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை போலீஸார், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 30 மாணவர்களையும் கைது செய்தனர்.
  சாலை மறியல்: இதையடுத்து, மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த அந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை பிற்பகல் கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கைது செய்யப்பட்ட மாணவர்களை நிபந்தனையின்றி உடனே விடுவிக்கக் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
  கல்லூரி முதல்வர் சின்னையா, உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் பிறகு மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
  இந்தப் போராட்டத்தால் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai