சுடச்சுட

  

  கீழ்பென்னாத்தூர், ராதாபுரம், வடவெட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் தேரோட்ட விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
  கீழ்பென்னாத்தூர் குளக்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 64-ஆவது ஆண்டு தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி, காலை 9 மணிக்கு கஜ பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 3.30 மணிக்கு புதிதாக செய்யப்பட்ட தேரில் உற்சவர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ்பென்னாத்தூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரோட்டத்தின் முன்பாக கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மேளதாளங்கள் சென்றன.
  மேலும், கரகாட்டம், குறவன் - குறத்தி நடனம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் பலர் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்து தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.
  ராதாபுரம் கிராமத்தில்...: தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. மாசி மாத உற்சவத்தையொட்டி, இந்தக் கோயிலில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா, 25-ஆம் தேதி மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
  வடவெட்டி: சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த மார்ச் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கிராமத்தின் முக்கிய சாலைகளில் பவனி வந்தார்.
  இதில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
  மேலும், தங்களது நிலத்தில் விளைந்த காய்கனிகள், நவதானியங்கள் உள்ளிட்டவற்றை அம்மன் தேர் மீது நேர்த்திக்கடனாக பக்தர்கள் வாரி இறைத்தனர். இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, வாணவேடிக்கை, சிறப்பு பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai