சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ்  2 தமிழ் முதல் தாள் தேர்வை 28,034 மாணவ, மாணவிகள் எழுதினர்.
  தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை பிளஸ்  2 தேர்வு தொடங்கியது. திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களில் தேர்வு எழுத மொத்தம் 81 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
  திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 53 மையங்களில் 8 ஆயிரத்து 909 மாணவர்கள், 9 ஆயிரத்து 029 மாணவிகளும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 28 மையங்களில் 4 ஆயிரத்து 479 மாணவர்கள், 5 ஆயிரத்து 472 மாணவிகளும் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
  81 மையங்களில் தொடக்கம்: திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 137 பள்ளிகள், செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 74 பள்ளிகள் என மொத்தம் 211 அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினர்.
  தேர்வர்கள் வருகை விவரம்: மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
  இவர்களில் 135 பேர் தேர்வு எழுத வரவில்லை. 27 ஆயிரத்து 754 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
  மாவட்டம் முழுவதும் மொத்தம் 314 தனித் தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 34 பேர் தேர்வு எழுத வரவில்லை. 280 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
  தேர்வுப் பணியில் 1,950 ஆசிரியர்கள்: தேர்வு மையங்களில் பணிபுரிய 1,550 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்கள், 90 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 90 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள், 20 வழித்தட அலுவலர்கள், 10 ஆய்வு அலுவலர்கள், பறக்கும்படையினர் 170 பேர் என மொத்தம் 1,950 ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோவிந்தசாமி (திருவண்ணாமலை), மோகன்குமார் (செய்யாறு), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
  மாணவர்கள் பிடிபடவில்லை: வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவ, மாணவிகள் யாரும் பிடிபடவில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை தெரிவித்துள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai