சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 291 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  மெய்யூர்: திருவண்ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் ரவி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் மாலதி வரவேற்றார்.
  முகாமில், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 121 மனுக்கள் பெறப்பட்டன.
  இதில், 48 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வட்டாட்சியர் ரவி வழங்கினார். இதில், வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
  உளுந்தை: வந்தவாசி வட்டம், கீழ்க்கொடுங்காலூர் உள் வட்டத்துக்கு உள்பட்ட உளுந்தை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நரேந்திரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.திருமலை முன்னிலை வகித்தார். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 265 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
  இந்த மனுக்களை பரிசீலித்த வருவாய்த் துறையினர், 22 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 22 பேருக்கு பட்டா மாற்றம், 45 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் உள்பட மொத்தம் 148 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
  முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் காஜா, தேவன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபு, பிரேம்குமார், ரமேஷ், கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  ஓகூர்: போளூரை அடுத்த ஓகூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் வைதேகி, வருவாய் ஆய்வாளர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் வரவேற்றார்.
  வட்டாட்சியர் புவனேஸ்வரி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 78 மனுக்களை பெற்றார். பின்னர், 25 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முகாமில் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
  பெரியகோளாப்பாடி: செங்கத்தை அடுத்த பெரியகோளாப்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 150 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
  மனுக்களை பரிசீலனை செய்த வருவாய்த் துறையினர், தகுதிவாய்ந்த 70 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செங்கம் வட்டாட்சியர் உதயகுமார், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai