சுடச்சுட

  

  செங்கம் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு: ஆட்சியர் ஆய்வு

  By DIN  |   Published on : 04th March 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கம் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அந்தப் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
  செங்கம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், இந்தப் பகுதியில் அவ்வப்போது பொதுமக்கள் போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம், மேல்பள்ளிப்பட்டு, மேல்ராவந்தவாடி, கட்டமடுவு, நீப்பத்துறை, இளங்குண்ணி ஆகிய கிராம ஊராட்சிகளுக்குச் சென்று குடிநீர் விநியோகம் செய்ய பயன்படும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், பழுதடைந்த சிறு மின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீர்த் தொட்டிகளை பார்வையிட்டதுடன், கிணறுகள் எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
  மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள சிறு மின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீர்த் தொட்டிகளை உடனடியாக சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
  ஒப்பந்ததாரர்கள் மீது புகார்: ஆய்வின்போது, ஆட்சியரிடம் பொதுமக்கள் கூறியதாவது: செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கைபம்பு, சிறு மின்விசை மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் பணி நடைபெற்றபோது, இந்தப் பணியை அதிகாரிகள் யாரும் கண்காணிக்கவில்லை.
  இதனால் கைபம்பு, ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், குறைந்த ஆழத்தில் தண்ணீர் வந்தவுடன் பணியை நிறுத்திவிட்டு, கைபம்பு, ஆழ்துறை கிணறுகளின் மீது சிறு மின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீர்த் தொட்டிகளை அமைத்துள்ளனர்.
   இதன் காரணமாகவே செங்கம் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.
  நடவடிக்கை எடுக்கப்படும்: இதையடுத்து, குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள கைபம்பு, ஆழ்துளை கிணறுகளின் ஆழத்தை ஆய்வு செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய
  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உறுதியளித்தார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai