Enable Javscript for better performance
செய்யாறு ஆற்றைச் சுத்தப்படுத்த களமிறங்கிய இளைஞர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு ஆற்றைச் சுத்தப்படுத்த களமிறங்கிய இளைஞர்கள்!

    By DIN  |   Published on : 05th March 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் கொள்ளை, குப்பை கூளங்களால் சீர்கெட்டுப்போயுள்ள செய்யாறு ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் செங்கம் பகுதி இளைஞர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகி ஊர்கவுண்டனூர், கிளையூர், குப்பனத்தம், பரனந்தல், செங்கம், செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம், காஞ்சி வழியாக பாயும் செய்யாறு ஆறு, ஆற்காடு வரை சென்று அங்குள்ள பாலாற்றில் கலக்கிறது. இந்த செய்யாறு ஆறானது சங்ககால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பழைமையான ஆறாகும்.
    தற்போது இந்த ஆற்றில் இருந்த மணல் முழுவதுமாக மணல் கொள்ளையர்களால் அள்ளப்பட்டுள்ளதுடன், செங்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் ஆற்றில் விடப்பட்டும், இறைச்சிக் கழிவுகள், கடைகளின் கழிவுகள், பழைய வீடுகளை இடிக்கும் குப்பை, மண் போன்றவை கொட்டப்பட்டும் சீர்கெட்டுப்போய் உள்ளது. மேலும், செய்யாறு ஆற்றில் கருவேல மரங்கள் முளைத்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    இந்த ஆற்றை சீரமைக்கக் கோரி, செங்கம் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
    இந்நிலையில், செங்கம் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து செய்யாறு ஆற்றை சுத்தப்படுத்த முடிவு செய்தனர். அதற்காக 2 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும், இளைஞர்களையும் ஒன்றிணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
    சீரமைக்க குழு அமைப்பு: அதன்படி, ஆர்வத்துடன் ஒன்றிணைந்த செங்கம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுக்காக 3 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் செய்யாறு ஆற்றை சீரமைக்கும் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இதற்காக செய்யாறு சீரமைப்பு குழு என ஒரு குழுவும் தொடங்கப்பட்டது.
    இதையடுத்து, செய்யாறு சீரமைப்பு குழு சார்பில், வெள்ளிக்கிழமை மாலை செங்கம் - போளூர் சாலையில் பிரமாண்ட விழிப்புணர்வுப் பேரணி தொடங்கி, செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் வரை நடத்தப்பட்டது.
    சீரமைப்பு பணி தொடக்கம்: இந்தப் பேரணியைப் பார்த்த செங்கம் பகுதி மக்களுக்கு சமூக பணியில் நாமும் ஈடுபட வேண்டும் என உற்சாகம் ஏற்பட்டது எனலாம். அதனடிப்படையில், சனிக்கிழமை காலை 3 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து செங்கத்தில் உள்ள செய்யாறு ஆற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    தற்போது செங்கம் - போளூர் சாலை மேம்பாலத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. பணியின்போது, விஷபூச்சிகள் ஏதேனும் தாக்கினால் உனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் பணி நடைபெறும் இடத்தில் மருத்துவ வசதி, அவசர ஊர்தி வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்பு பணியின்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    செய்யாறு ஆற்றை சீரமைத்து செங்கம் நகருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னெழுச்சியாக ஆற்றில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai