சுடச்சுட

  

  ரேஷன் கடைகளில் முறையாக பொருள்களை விநியோகிக்காவிடில் போராட்டம்: எ.வ.வேலு எம்எல்ஏ அறிவிப்பு

  By DIN  |   Published on : 05th March 2017 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியாயவிலைக் கடைகளில் (ரேஷன்) முறையாக பொருள்களை விநியோகம் செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தெரிவித்தார்.
  திருவண்ணாமலை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் சரிவர விநியோகம் செய்யப்படுவதில்லை என்று எ.வ.வேலு எம்எல்ஏவுக்கு புகார்கள் சென்றனவாம். இதையடுத்து, திருவண்ணாமலை, கார்கானா தெருவில் உள்ள 2 நியாயவிலைக் கடைகளில் எ.வ.வேலு சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  கடைகளில் உள்ள அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலை குறித்து கடை விற்பனையாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர், அந்தப் பகுதி பொதுமக்களிடமும் அத்தியாவசியப் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்.
  இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என புகார் வந்தது. அதனடிப்படையில், 2 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, பொருள்கள் போதுமான அளவு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படாததால், பொதுமக்களுக்கு எங்களால் பொருள்களை வழங்க முடியவில்லை என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
  ஒரு கடையில் 745 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்தக் கடைக்கு பிப்ரவரி மாதம் வெறும் 140 கிலோ உளுந்தம் பருப்பு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை 745 குடும்ப அட்டைகளுக்கு எப்படி பிரித்து விற்பனை செய்ய முடியும். மார்ச் 4-ஆம் தேதி ஆகியும் கடைகளுக்கு இந்த மாதத்துக்கான பொருள்கள் வந்து சேரவில்லை.
  திமுக ஆட்சியில் மாத இறுதியில் (25-ஆம் தேதி முதலே) ஒதுக்கீடு உத்தரவு பிறப்பித்து, முதல் தேதியன்றே அனைத்துப் பொருள்களும் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், 100 சதவீதம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் கிடைத்து வந்தன.
  இந்த ஆட்சியில் பொருள்களை சரவர விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,53,735 குடும்ப அட்டைகள் உள்ளன. 1,627 நியாயவிலைக் கடைகள், கற்பகம் விற்பனை அங்காடிகள் உள்ளன. இந்த 2 கடைகளில் எந்த நிலை இருந்ததோ, அதே நிலைதான் 1,627 நியாயவிலைக் கடைகளிலும் உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளும் பொருள்கள் இல்லாமல் காலியாக உள்ளன.
  மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. நியாயவிலைக் கடைகளில் இதே நிலை தொடர்ந்தால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் முன்பும் திமுக போராட்டம் நடத்தும் என்றார்.
  பேட்டியின்போது, முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் சி.என்.அண்ணாமலை, நகர இளைஞரணி நிர்வாகி ராஜாங்கம், ஒன்றியச் செயலர் ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai