சுடச்சுட

  

  மாணவப் பருவத்தில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்: நடிகர் சார்லி

  By DIN  |   Published on : 06th March 2017 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவப் பருவத்தில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு நடிகர் சார்லி அறிவுரை கூறினார்.
  திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் பொன்.முத்து முன்னிலை வகித்தார்.
  இதில் நடிகர் சார்லி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
  இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், யார் ஒருவர் புத்தகங்களை மேலிருந்து கீழ் நோக்கிப் படிக்கிறார்களோ, அவர்களது வாழ்க்கை மேல் நோக்கி உயரும். கல்விதான் ஒரு மனிதனை சமுதாயத்தில் உயர்த்தும். கல்வியைக் கற்றுக் கொண்டே இருக்கும் சமுதாயம் உயரும். மாணவப் பருவத்தில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். நாம் என்ன விதையை விதைக்கிறோமோ, அதுவாகத்தான் நாம் வளருவோம். எனவே, மாணவப் பருவத்தில் நல்ல விதைகளை விதைக்க வேண்டும்.
  மனிதனின் வெற்றிக்குக் காரணம் அவரவர் எண்ணம்தான். என்னால் இது முடியுமா... என்ற சந்தேகத்திலேயே ஒரு பணியைச் செய்ய முற்பட்டால் அதில் தோல்விதான் கிடைக்கும். என்னால் இந்தப் பணியைக் கண்டிப்பாக செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் முயன்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். எனவே, மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்றார் அவர்.
  தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai