ஆட்சியர் அலுவலகம் எதிரே தம்பதி தீக்குளிக்க முயற்சி
By DIN | Published on : 07th March 2017 06:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற தம்பதியிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேலூர் - திருவண்ணாமலை சாலையில் தம்பதி திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனைக் கவனித்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தண்டராம்பட்டை அடுத்த புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் (40). அவரது மனைவி ஜெயந்தி (35) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்களது வீட்டுக்குச் செல்லும் அரசு புறம்போக்குப் பாதையை ராஜேந்திரன் குடும்பத்தினர் ஆக்கிரமித்து விட்டதாகவும், வீட்டுக்குச் செல்ல வழியில்லாதது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.