தாட்கோ மூலம் 11 பேருக்கு ரூ. 2.20 லட்சம் கடனுதவி
By DIN | Published on : 07th March 2017 06:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ. 2.20 லட்சம் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மு.வடநேரே, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 690 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
11 பேருக்கு ரூ. 2.20 லட்சம் கடனுதவி: கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மூலம் ஆட்சியரின் விருப்புரிமை திட்டத்தின் கீழ் 11 பேருக்கு ரூ. 2.20 லட்சம் மானியத்துடன் மளிகைக் கடை, கறவை மாடு, பேன்ஸி ஸ்டோர், கட்பீஸ் கடை உள்ளிட்ட சுயதொழில் செய்ய கடனுதவிகளை ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.