சுடச்சுட

    

    தெய்யாறு கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி

    By DIN  |   Published on : 09th March 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தெய்யாறு கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சார் - ஆட்சியர் பிரபு சங்கர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
    தெய்யாறு கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு செய்யாறு சார் - ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அவர் பேசியது:
    இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் குடிநீர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், வறட்சியை உருவாக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். புதன்கிழமை உலக மகளிர் தினமாகும்.
    எனவே, பெண்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர நாம் பாடுபடுவோம் என்று இந்த தினத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
    வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், நரேந்திரன், அரிதாஸ், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், துணை வட்டாட்சியர்கள் மூர்த்தி, திருமலை, தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், விஜயகுமாரி, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அருண்குமார், ராஜகுரு உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
    முகாமில் 25 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 5 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 7 பேருக்கு குடும்ப அட்டை, 21 பேருக்கு வேளாண் கருவிகள் உள்பட மொத்தம் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    பின்னர், அந்தக் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை சார் - ஆட்சியர் பிரபுசங்கர் தொடக்கி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai