Enable Javscript for better performance
மனு நீதி நாள் முகாம்: 104 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த வீரானந்தல், திருவண்ணாமலையை அடுத்த மேப்பதுறை ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 104 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    செங்கத்தை அடுத்த வீரானந்தல் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா, ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் காசி வரவேற்றார். முகாமில் வேளாண் துறை, வனத் துறை, மருத்துவத் துறை, வட்டார வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு, துறை சார்ந்த திட்டங்கள் குறித்துப் பேசினர்.
    இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகோஸ்வரி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் உள்பட 67 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் இடுபொருள்கள், பவர் டிரில்லர் ஆகியவைகளை வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது: புதுப்பாளையத்தில் இருந்து வீரானந்தல் கிராமம் செல்லும் சாலையில் ரூ.20 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், புதுப்பாளையம் வரை வந்து செல்லும் அரசு நகரப் பேருந்தை வீரானந்தல் வரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் துரை, மண்டல துணை வட்டாட்சியர் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் துரைராஜ், நில அளவை அலுவலர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், முரளி, ரவிமாராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    மேப்பதுறை: துரிஞ்சாபுரம் வட்டம், மேப்பதுறை கிராமத்தில் புதன்கிழமை மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, திருவண்ணாமலை வட்டாட்சியர் ரவி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.
    மாவட்ட விநியோக அலுவலர் சாவித்திரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 110 மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், 37 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் வேளாண் உதவி இயக்குநர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சரவணன், நில அளவர் ராஜ்குமார், வேளாண் உதவி அலுவலர் தண்டபாணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கண்ணன், தோட்டக்கலை அலுவலர் சண்முகம், வருவாய் ஆய்வாளர் தேன்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai