சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    By DIN  |   Published on : 10th March 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் வருகிற 14-ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். ஊராட்சிச் செயலர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கடந்த 5.12.2006-இல் முழு நேர ஊழியர்களாக்கப்பட்டனர். அதன் பின்னர், 19.02.2016 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்தப்படி, ஊராட்சிச் செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    ஊராட்சிச் செயலர்களின் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சிச் செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, கூடுதல் பொறுப்புப்படி வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
    இந்தத் தகவலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai