சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 236 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுவேளானந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தண்டபாணி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சுகுணா வரவேற்றார்.
  வட்டார வேளாண் உதவி இயக்குநர் அக்கண்டராவ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பூங்குழலி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அன்பரசு ஆகியோர் பேசினர்.
  முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 94 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 29 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், அண்ணா சிறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் பொன்விழி, கிராம நிர்வாக அலுவலர் வள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  வாழியூர்: போளூர் வட்டம், வாழியூர் ஊராட்சியில் புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
  வட்டாட்சியர் புவனேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் தேவேந்திரன், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, 65 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
  முகாமில் வேளாண் துறை உதவி இயக்குநர் வடமலை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மனோகரன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, இளைஞரணிச் செயலர் பொய்யாமொழி, முன்னாள் கவுன்சிலர் சந்திராதங்கராஜ் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  மேல்சீசமங்கலம்: செய்யாறு வட்டம், மேல்சீசமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு செய்யாறு வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் வே.ஜோதி கலந்துகொண்டு, பட்டா மாற்றம், சிறு விவசாயி சான்று, வாரிசுச் சான்று உள்பட 118 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
  மேலும், வேளாண் துறை சார்பில் 14 விவசாயிகளுக்கும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கும், சுகாதாரத் துறை சார்பில் 5 பேருக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில் அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மண்டல துணை வட்டாட்சியர் முரளி, வாக்கடை பிர்கா வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai