சுடச்சுட

  

  காவேரிப்பாக்கம் அருகே காவலரின் திருமண விழாவில் மணமகளின் 3 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் சிவலிங்கம்(26). இவர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
  இந்நிலையில், சிவலிங்கத்துக்கும் ஆற்காட்டை அடுத்த ஜாகீர்வளவனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் மகாலட்சுமிக்கும் (22) காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை திருமணம் நடந்தது.
  திருமணத்தையொட்டி, புதன்கிழமை இரவு பெண் அழைப்பு நடைபெற்றது. இதில் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மகாலட்சுமி தூங்குவதற்காக மணமகள் அறைக்கு சென்றார்.
  அங்கு தனது 2 செல்லிடப்பேசிகள், தான் அணிந்திருந்த 3 பவுன் ஆரத்தை கழற்றி, ஒரு கைப்பையில் வைத்து விட்டு மகாலட்சுமி தூங்கினார். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது, நகை வைத்திருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
  அவர்கள் இச்சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தெரியாமல் நகை வைத்திருந்த கைப்பையை தேடினர். அப்போது, திருமண மண்டபத்தின் மொட்டை மாடியில் கைப்பை கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, நகையை காணவில்லை. 2 செல்லிடப்பேசிகள் மட்டும் இருந்தன. மர்ம நபர்கள் 3 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து மகாலட்சுமியின் அண்ணன் தமிழ்செல்வன் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai