சுடச்சுட

  

  செய்யாறு, செங்கம், ஆரணி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சிறப்புக் குழுவினர்

  By DIN  |   Published on : 11th March 2017 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு, செங்கம், ஆரணி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சிறப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
  செய்யாறு கோட்டத்தைச் சேர்ந்த செய்யாறு, வெம்பாக்கம், ஆரணி, வந்தவாசி ஆகிய வட்டங்களுக்கு சிறப்புக் குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஆர்.சுப்பிரமணியம், சி.எஸ்.கே.சதீஷ், கு.ஆர்.ஜெயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  இவர்கள் மூவரும் 4 வட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
  இந்நிலையில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பகுதியில் கல்லூரி முதல்வர் கீதாராணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இ.மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியை வழக்குரைஞர்கள் குழுவினர் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினர். இதே போன்று புளூந்தை, தளரபாடி, காழியூர், புளியரம்பாக்கம், பாண்டியம்பாக்கம், சோழவரம், செல்லப்பெரும்புலிமேடு, நரசமங்கலம், தூசி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை வழக்குரைஞர்கள் குழுவினர்
  நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
  ஆய்வுப் பணியின்போது, வட்டாட்சியர்கள் (செய்யாறு) வி.ஜெயராமச்சந்திரன், (வெம்பாக்கம்) க.பெருமாள், (ஆரணி) தமிழ்மணி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை அலுலவலர்கள் பலர் உடனிருந்தனர்.
  கையெழுத்து இயக்கம் தொடக்கம்: முன்னதாக செய்யாறு பேருந்து நிலையம் அருகே சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.சுப்பிரமணியம், சி.எஸ்.கே.சதீஷ், கு.ஆர்.ஜெயா ஆகியோர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தனர்.
  செங்கம்: செங்கம் பகுதியில் உள்ள தோக்கவாடி, அன்வராபாத் ஆகிய பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், செங்கத்தில் பாயும் செய்யாற்றில் கருவேல மரங்களை செங்கம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்தப் பணியை உயர் நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஆர்.புஷ்பாகரன், ஜெயலட்சுமி, பி.மகேஷ்வரி
  ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
  ஆய்வின்போது, செய்யாற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுக்கு வழக்குரைஞர்கள் குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
  வழக்குரைஞர் குழுவினருடன் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் ராஜாராம், செங்கம் வட்டாட்சியர் உதயகுமார், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
  ஆரணி: ஆரணியில் வட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில், ஆரணி நகரப் பகுதி மற்றும் ஆரணி வட்டத்தில் உள்ள இரும்பேடு, மாமண்டூர், எஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு, தசராப்பேட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 8 ஏக்கரில் இருந்த கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
  இந்தப் பணியை உயர் நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.எஸ்.கே.சதீஷ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பரணிதரன், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai