சுடச்சுட

    

    14,291 ஹெக்டேரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: மாவட்டத்தில் சிறப்புக் குழுவினர் ஆய்வு

    By DIN  |   Published on : 11th March 2017 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 14,291 ஹெக்டேரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் பணியை சிறப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு, நெடுஞ்சாலைகள், தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
    இதையடுத்து, தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வுக் குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    அதன்படி, வழக்குரைஞர்கள் சி.எஸ்.கே.சதீஷ், ஆர்.சுப்பிரமணியம், ஆர்.புஷ்பாகரன், கு.ஆர்.ஜெயா, பி.மகேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோர் அடங்கிய சிறப்பு ஆய்வுக் குழுவினர், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை, திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல், அன்வராபாத், தோகைவாடி, சாத்தனூர், முன்னூர்மங்கலம், கீழ்சிறுப்பாக்கம், வட ஆண்டாப்பட்டு, சோமாசிபாடி, கருங்காலிகுப்பம், திண்டிவனம் சாலை, நெடுங்காம்பூண்டி, புளியரம்பாக்கம், பழந்தை, மேல்பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சிறப்பு ஆய்வுக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    ஆய்வின்போது, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர் சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், மகாதேவன், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    ஆய்வுக் கூட்டம்: இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, சிறப்பு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
    கூட்டத்தின்போது, மாவட்டம் முழுவதும் 14 ஆயிரத்து 291 ஹெக்டேரில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் ஆயிரத்து 123 ஹெக்டேரில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    இதைக் கேட்ட சிறப்பு ஆய்வுக் குழுவினர், மீதம் 13 ஆயிரத்து 168 ஹெக்டேரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai