கல்வாசல் பூங்காவனத்தம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published on : 12th March 2017 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். விழாவையொட்டி, பக்தர்கள் அலகு குத்தியும், முதுகில் சிறியரக தேரை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
அதேபோன்று, இந்த ஆண்டு தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பூங்காவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கேளூர், விளாங்குப்பம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தியதுடன், அம்மனை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்ன தானம், நீர்மோர் வழங்கப்பட்டன. இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.