Enable Javscript for better performance
திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 12th March 2017 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை-செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, இங்குள்ள ஆழ்துளை கிணற்றை தூர்வாரி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் மனு கொடுத்தனராம்.
    ஆனாலும், குடிநீர் பிரச்னைக்கு துரித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமை (மார்ச் 11) திருவண்ணாமலை-செங்கம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மனிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, ஓரிரு நாளில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று டி.கே.லட்சுமி நரசிம்மன் உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai