சுடச்சுட

  

  பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் தந்தைக்குத் திதி கொடுத்த ஸ்ரீஅருணாசலேஸ்வரர்

  By DIN  |   Published on : 12th March 2017 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
  பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலைக் கட்டியவர்களில் வல்லாள மகாராஜாவும் ஒருவர். திருவண்ணாமலையை ஆண்ட மன்னர்களில் ஒருவரான இவர், அருணாசலேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனவே, தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைத் தீர்த்து வைக்குமாறு அருணாசலேஸ்வரரிடம் வல்லாள மகாராஜா நீண்ட காலமாக வேண்டி வந்தார்.
  தான் இறக்கும் தருவாயில்கூட குழந்தை பாக்கியம் கிடைக்காததால் மனமுடைந்த வல்லாள மகாராஜாவுக்கு ஒருநாள் அருணாசலேஸ்வரர் காட்சி தந்தார். அப்போது, உன்னை எனது தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு நானே மகனாக இருந்து மகன் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வேன் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கூறினாராம்.
  மகாராஜாவின் இறப்பு: இதன்பிறகு, தைப்பூசத் திருநாளன்று திருவண்ணாமலை ஈசான்ய தீர்த்தக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொள்ள மேளதாளங்கள் முழங்க ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சென்றார். தீர்த்தவாரியில் பங்கேற்றிருந்தபோது, வல்லாள மகாராஜா போரில் இறந்த தகவல் கிடைத்தது.
  உடனே, மேளதாளங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர், அமைதியாக கோயிலுக்குத் திரும்பி தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் செய்து முடித்தார். இதையடுத்து, வல்லாள மகாராஜா இறந்த 30-ஆவது நாளான மாசி மகத்தில் திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதிக்குச் சென்று வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுத்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வணங்கினார் என்பது புராண வரலாறு.
  பள்ளிகொண்டாப்பட்டு தீர்த்தவாரி: இந்த வரலாற்று நிகழ்வின்படி, பல நூறு ஆண்டுகளாக பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் மாசி மகத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து உற்சவர் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் புறப்பாடு நடைபெற்றது. உற்சவமூர்த்திகள் பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு வந்தடைந்ததும், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதையொட்டி, பல ஆயிரம் பக்தர்கள் அங்கு குவிந்து கவுதம நதியில் குளித்து ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட்டனர். பல பக்தர்கள் தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன், பாமக நிர்வாகி காளிதாஸ், கோயில் அமீனா அண்ணாமலை, கோயில் அதிகாரி செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
  பிரத்யேக செயற்கை குளம் அமைப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக போதிய தண்ணீர் இல்லாமல் பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதி வறண்டு காணப்படுகிறது. எனவே, தீர்த்தவாரியையொட்டி இந்த நதியில் தாற்காலிகமாக செயற்கைக் குளம் அமைக்கப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது.
  குளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த செயற்கைக் குளத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai